User Info

IP Address
38.107.191.104
United States United States

Who's Online

We have 5 guests online

Impressions total:61091
19. முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஓர் இறைத்தூதர் PDF Print E-mail
Monday, 15 December 2008 13:38

மனித வரலாற்றின் எல்லாக் கட்டங்களிலும், எல்லா சமூகங்களுக்கும், அவரவர் சமூகத்திலிருந்தே சிலரைத் தேர்ந்தெடுத்து இறைத்தூதர்களாக அனுப்பியிருக்கின்றான் இறைவன்.

முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் ஒருவரையே தேர்ந்தெடுத்து, அதே மொழியிலேயே "வஹி" கொடுத்து அனுப்பி வைத்தான் இறைவன். இறைவன் இறைத்தூதர்களுக்கு வஹி மூலமாகக் கொடுக்கின்ற செய்திகளின் தொகுப்புத் தான் இறைவேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

அப்படியானால் நமக்கு - அதாவது இன்று 21-ம் நூற்றாண்டில் - பல நாடுகளில் - பல மொழிகளைப் பேசி - வாழ்கின்ற இன்றைய நமது சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார் என்ற கேள்வி எழுகின்றது!

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால், அரேபியா நாட்டில், மக்கா என்ற நகரில், "குறைஷ்" என்றழைக்கப்படும் ஓர் உயர் குலத்தில், அப்துல்லாஹ்-ஆமினா என்ற பெற்றோருக்குப் பிறந்த முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) - தனது 40 -வது வயதில் -

தம்மை - இறைவன் தனது தூதராகத் தெரிவு செய்திருக்கின்றான் என்று பிரகடனம் செய்கின்றார்!

 

அரபி மொழியில் இறைவன் "ஜிப்ரயீல்" எனும் வானவர் மூலம் தமக்கு வஹி அனுப்புவதாகச் சொல்கிறார்! அதனைக் குர் ஆன் என்று அவர் அழைக்கின்றார்.

அப்படியானால் - அரபி மொழி பேசும் மக்களுக்கு மட்டுமா அவர் இறைத்தூதர்? இல்லை! அவர் - தம்மை - இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் இறைத்தூதர்களில் தாமே இறுதியானவர்! தமக்குப் பிறகு யாரும் இறைத்தூதராக அனுப்பப்படப் போவதில்லை என்றும் கூறுகிறார்!

எனவே - தமது வருகைக்குப் பின் - அவரது காலம் முதல் உலக இறுதி நாள் வரை, இப்பூவுலகில் பிறந்து வாழ்ந்த, வாழ்கின்ற, வாழ இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் தம்மையே இறுதி இறைத்தூதராக இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறார்!

எவ்வளவு பெரிய பிரகடனங்கள்? அவ்வளவு சுலபமாக எப்படி இவைகளை ஏற்றுக் கொள்ள முடியும்? ஆம்! ஆய்வு செய்த பின்னர் தான் ஒன்றை ஏற்கவோ அல்லது மறுக்கவோ வேண்டும்.

இதோ தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைவனின் தூதர் என்ற பொறுப்பு குறித்து அவர் வஹி மூலம் பெற்ற இறைவனின் வாக்குகள் சிலவற்றை இங்கே காண்போம்:

"முஹம்மது - ஒரு தூதரே அன்றி வேறல்லர்! நிச்சயமாக அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர்!" (திருக் குர்ஆன் 3:144)

"அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரயீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்." (2: 97)

"நபியே! நீர் கூறுவீராக: இறைவன் அனுப்பிய தூதர்களில் நான் புதிதாக வந்தவனன்று!" (46:9)

"மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி அவர்களில் இருந்தே ஒரு மனிதருக்கு வஹி அருள்கிறோம் என்பது இம் மனிதர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? (10:2)

"நபியே! நாம் உம்மை உலகத்தார் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை!" (21: 107)

"நபியே! நாம் உம்மை மனித குலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் தான் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை! (34:28)

"அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறைவனின் தூதர்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் இருக்கிறார்!" (33:40)

மேலே நாம் குறிப்பிட்ட இறைவசனங்கள் அனைத்தும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாமாகவே "கற்பனை" செய்து கொண்டு அறிவித்தவை அல்ல! மாறாக் - இறைவனே வஹி மூலமாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மூலம் அறிவிக்கச் சொன்னவை! இதனையும் குர் ஆன் பறை சாற்றுகிறது.

"அவர் தம் இச்சைப்படி எதனையும் பேசுவத்ல்லை! அது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப் பட்டதே அன்றி வேறில்லை! (33:34)

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒருவர் தான் இறைத்தூதர் என்பது அல்ல! உண்மையிலேயே ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறைத்தூதர்களாக மனித வரலாறு நெடுகிலும் அனுப்பப் பட்டே வந்துள்ளனர். அப்படியிருக்கும்போது முஹ்ம்மது என்ற ஒரே ஒரு இறைத்தூதரை முற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கப் படலாம்.

மற்ற எல்லா இறைத்தூதர்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அல்லது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு என்று மட்டும் தான் அனுப்பப் பட்டிருக்கின்றார்கள். ஆனால் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வர்கள் இறுதியான இறைத்தூதராக இருப்பதாலும், அவரது இறைத்தூது உலக மக்கள் அனைவரையும் தழுவி நிற்பதாலும் தான், அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டியது அவசியம் ஆகி விடுகின்றது.

சகோதரர்களே! முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களின வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்களில் சிலர் - அவரை ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாகப் பார்க்கிறார்களே த்விர அவரை ஒரு இறைவனின் தூதராகப் பார்ப்பதிலை!

"இஸ்லாம் என்பது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு மதம். அவர் அரேபிய நாட்டில், உயர் குலம் ஒன்றில் பிறந்தார். கதிஜா என்ற பணக்கார விதவையை மணந்தார். அங்கே மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டும், மூட நம்பிக்கைகளில் மூழ்கியும் வாழ்ந்திடக் கண்டார். அவர் ஹிரா என்ற மலைக்குகை ஒன்றில் தங்கி இருந்து கொண்டு ஆழமாகச் சிந்தித்தார். தமது நாற்பதாவது வயதில் தமக்கு இறைவன் செய்திகளை அனுப்புவதாக எண்ணிக் கொண்டார். அவருடைய உபதேசங்கள் அடங்கிய நூலே குரான் என்றழைக்கப்படுகின்றது!"

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வரலாற்றை இவ்வாறு புரிந்து வைத்திருப்பவர்கள், இறைவன் மனிதர்களுக்கு வழி காட்டிட தனது தூதர்களை அனுப்பி வைக்கிறான் என்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு கோட்பாட்டினை உணர்ந்து கொள்ள இயலாமல்போய் விடுகின்றனர்.

எனவே இப்போது நாம் மூன்று விஷயங்களை ஆய்வு செய்திட வேண்டியுள்ளது:

1. முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) - தன்னை இறைவனின் தூதர் என்றும் அதுவும் இறுதியான இறைத்தூதர் என்றும் அழைத்துக் கொண்டாரே! அது உண்மை தானா?

2. அவர் அப்படித் தமக்கு வந்ததாகச் சொல்கின்ற "செய்திகள்" தான் என்ன?

3. உலகில் தோன்றிய எண்ணற்ற தத்துவஞானிகள், சீர்திருத்தவாதிகளில் ஒருவர் தான் முஹம்மது நபியா?அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை தானா?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 
© 2008 - 2009 CounselorMansoor.com
Site Designed and Hosted by MohamedHusain.com