User Info
38.107.191.104
Who's Online
We have 4 guests online




| Impressions total: | 61096 |
| 25. இவன் தான் முஸ்லிம் - பாகம் - 1 |
|
|
|
| Wednesday, 07 January 2009 17:28 | |||
|
மன்னிப்பிற்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? ஓர் ஆங்கிலத் திரைப்படம். படத்தின் பெயர் நவீன யுகம் (Modern Times). கதாநாயகன் சார்லி சாப்லின். அப்படத்தில் வரும் ஒரு காட்சி.குடும்பத்தைப் பிரிந்து வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன். அது ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. எனினும் நமது கதாநாயகனின் வேலை மிக எளிதானது தான். ஒரு மிகப்பெரிய கூடம். அதனுள் ஒரு சிறிய அறை. சுழலுகின்ற உலோகப் பட்டை ஒன்று அந்த அறையின் ஒரு பக்கமாக உள்ளே நுழைந்து மறு பக்கம் வழியாக அடுத்த அறைக்குச் சென்று கொண்டிருக்கும். அந்த உலோகப் பட்டை மீது திருகு மறைகள் (Nuts) வரிசையாக வைக்கப்பட்டு அவை அறைக்குள்ளே வரும். நமது கதாநாயகன் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட வேண்டும். மூன்றாவது திருகு மறையை எடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் திருகி அப்படியே அந்த உலோகப் பட்டையின் மீது வைத்து விட வேண்டும். அது போலவே மீண்டும் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட்டு, மூன்றாவதை எடுத்து ஒரே ஒரு தடவை திருகி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை. மணியடித்தால் அன்றைய வேலை முடிந்தது.வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நமது கதாநாயகனுக்கு அந்த திருகு மறைகள் எங்கிருந்து வருகின்றன, எதற்காக வருகின்றன, அவை எங்கே செல்கின்றன, எதற்கு அவை பயன் படுத்தப் படுகின்றன - இவை எதுவுமே தெரியாது! அதே அறையில் அவரோடு சேர்ந்து இன்னும் ஏழெட்டு பேர். அவர்கள் அனைவருக்கும் அதே வேலை தான். அவர்களுள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட முடியாது. அருகில் உள்ள தொழிலாளியிடம் பேச்சுக் கொடுத்தால் அந்த மூன்றாவது திருகு மறையைத் தவற விட்டு விடுவார். அப்படி அவர் தவற விட்டு விட்டால் தொழிற்சாலையின் எல்லா இயக்கங்களுமே நின்று போய் விடும். அப்படித்தான் ஒரு நாள். நமது கதாநாயகனை சந்திக்க அவனது தாய், அவனது காதலி, மற்றும் அவனது நண்பன் - மூவரும் தொழிற்சாலைக்கு வந்து விட்டனர். யந்திரத் தனமான ஒரு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த நமது கதாநாயகனுக்கு அவர்களைக் கண்டதும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தன்னை மறந்தான். தனது வேலையை மறந்தான். ஓடி வந்தான். தாயைக் கட்டிப் பிடித்தான். நண்பனைக் கட்டிப் பிடித்தான். "ஹலோ! எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம்? எங்கிருந்து வருகிறீர்கள்? எல்லாரும் நலம் தானா? பார்த்து நீண்ட காலமாகி விட்டதே! நீங்கள் யாரும் அருகில் இல்லாததால் நான் தவித்துத் தான் போய் விட்டேன். வாருங்கள், எல்லாரும் போய் தேநீர் அருந்தலாம்" என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான். ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். திடீரென்று தொழிற்சாலையின் சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அனைவரும் வெளியே ஓடி வந்தனர். காவலர்கள் சிலரும் உயர் அதிகாரிகள் சிலரும் நமது கதாநாயகன் வேலை பார்க்கும் அறைக்கு ஓடி வந்தனர். என்ன நடந்தது? உலோகப் பட்டையில் வைக்கப் பட்ட திருகு மறைகளுள் ஒன்று திருகப் படாமல் வந்து கொண்டிருந்ததாம். அதனால் தொழிற்சாலையின் அனைத்து இயக்கங்களும் நின்று விட்டனவாம். பிடித்தார்கள் நமது கதாநாயகனை! திட்டித் தீர்த்தார்கள்! தண்டனையும் கொடுத்தார்கள்! இந்தக் கதையைக் குறித்துக் கொஞ்சம் சிந்தித்து விட்டு மேலே தொடருங்கள். தான் உருவாக்க நினைக்கும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டுப் படைப்பவன் இறைவன். ஒவ்வொரு படைப்பினத்தின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பவன் அவனே. படைக்கப் பட்ட ஒவ்வொன்றும் சென்றடைய வேண்டிய இறுதி இலக்கையும் முடிவு செய்பவன் அந்த இறைவன் தான். அதனதன் இலக்கை நோக்கி அந்தப் படைப்பினங்களை வழி நடத்திச் செல்பவனும் அவனே தான். இந்த நான்கு அம்சங்களும் எல்லாப் படைப்பினங்களுக்கும் பொருந்தும். அது மிக மிகச் சிறிய அணுவாக இருந்தாலும் சரி, அல்லது மிக மிகப் பெரிய விண்மீனாக இருந்தாலும் சரி - அனைத்துப் படைப்பினங்களுக்கும் இது பொருந்தும். சான்றாக ஒரு அணுவுக்கு உள்ளே உள்ள எலக்ட்ரான் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். எலக்ட்ரான் ஒன்றைப் படைத்து, அதன் வடிவத்தை நிர்ணயித்து, அது சென்றடைய வேண்டிய இலக்கினை முடிவு செய்து அந்த இலக்கினை நோக்கி அதனைச் செலுத்துபவன் இறைவனே! அது போலவே - நாம் வாழ்கின்ற பேரண்டத்தை இல்லாமையிலிருந்து உருவாக்கி, அதற்கு வடிவம் தந்து, அதன் இலக்கையும் நிர்ணயித்து, அதன் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருப்பவனும் அவன் தான்! இந்த நான்கு அம்சங்களையும் இறைவன் தன்னகத்தே வைத்திருப்பதால் எந்த ஒரு படைப்பின் அமைப்பிலும், அதன செயல்பாட்டிலும் நாம் யாதொரு குறையும் கண்டு விட முடியாது. ஒரு ரோஜா மலரின் வடிவத்தில் நம்மால் ஒரு குறை கண்டு விட முடியுமா? பூமியின் சுழற்சியிலும், கதிரவன் அமைந்திருக்கும் தூரத்திலும் நாம் யாதொரு குறையும் கண்டு விட முடியுமா? இதில் எந்த ஒரு படைப்பும் வீணுக்காகப் படைக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று எந்த ஒரு தொடர்பு இல்லாமலும் படைக்கப்படவில்லை. அவை அனைத்தும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கத்துக்குட்பட்டே செயல்படுகின்றன! நமக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கின்ற நமது பேரண்டத்தின் எந்த ஒரு பகுதியை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் - அவற்றில் இறைவனின் அறிவாற்றல் வெளிப் படும்! அவற்றின் அழகு நம்மை வியப்பில் ஆழ்த்தும்! அவற்றில் இறைவனின் கருணையும் தெரிய வரும்! நாம் உள்ளிழுக்கும் காற்றில், நாம் அருந்திடும் தண்ணீரில், நமது உணவில், விண்ணில், கடற்பரப்பில், ஓசோன் மண்டலத்தில் - இவ்வாறு எங்கு நோக்கினும் - நாம் இறைவனின் அறிவை, அழகுணர்ச்சியை, கருணையைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அணுவும் இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ்! விண்ணீல் சிதறிக் கிடப்பது போல் தோற்றமளிக்கின்ற விண்மீண்கள் அனைத்துமே - இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ் தான்! அதனால் எங்கும் அழகு! எங்கும் இறைவனின் கருணை! எங்கும் வெளிப் படுகின்ற இறைவனின் அறிவாற்றல்! அதனால் எங்கும் அமைதி! *** ஆனால் - மனிதன் முற்றிலும் வித்தியாசமானவன். மற்ற படைப்பினங்களிலிருந்து முழுவதும் வேறுபட்டவன். பல சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்ட்வன். மனிதனின் சிறப்புகளிலேயே மிக மிக முக்கியமான சிறப்பு, வேறு எந்த ஒரு படைப்பினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு - தாமே ஒன்றைத் தெரிவு செய்து செயல்படுகின்ற சுய அதிகாரம் (Will Power)தான்!மற்ற எல்லாப் படைப்பினங்களையும் தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்ட இறைவன், மனிதனுக்கு மட்டும் ஏன் சுயமாக ஒன்றைத் தேர்வு செய்து செயல்படும் உரிமையை வழங்கிட வேண்டும்? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது! அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது! மனிதப் படைப்பின் பின்னணியில் இறைவனின் மகத்தானதொரு திட்டம் இருக்கிறது! இப்போது முதலில் நாம் குறிப்பிட்ட அந்த நான்கு அம்சங்களையும் மனிதனிடத்தில் பொருத்திப் பார்ப்போமா? - இறைவன் தான் மனிதனைப் படைத்தான்! - ஒத்துக் கொள்கிறீர்களா? - இறைவன் தான் மனிதனின் வடிவத்தை அழகுற அமைத்துத் தந்தான் - ஒத்துக் கொள்கிறீர்களா? - மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கினை இறைவனே தீர்மானிக்கிறான் - ஒத்துக் கொள்கிறீர்களா? - அப்படியானால் - மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி மனிதனுக்கு வழி காட்டி அழைத்துச் சென்றிட வேண்டிய பொறுப்பு இறைவனுக்கு உண்டு - ஒத்துக் கொள்கிறீர்களா? இந்த பொறுப்பைத் தான் இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைப்பதன் மூலம் நிறைவேற்றித் தந்திருக்கின்றான். இப்போது மனித சமூகத்துக்கு முன்னால் இரண்டு பாதைகள். ஒன்று: இறைத் தூதர்கள் மூலம் அனுப்பப் பட்ட இறை வழிகாட்டுதலை ஏற்று நடந்திடும் பாதை! மற்றொன்று : இறைவனின் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளாமல் தனது விருப்பப்படி செல்கின்ற பாதை! இந்த இரண்டு வெவ்வேறு நிலைகளிலும் - என்னென்ன விளைவுகள் நிகழும் என்பதே இப்போது எழும் கேள்வி. முதலில், இறைவனின் வழி காட்டுதலின் படி மனிதன் நடந்தால் என்ன நிகழும்? நமது வாழ்வோடு தொடர்புடைய ஒவ்வொரு படைப்பையும் குறித்து சற்று சிந்தியுங்கள். 149.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கதிரவன் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும் தருகின்றது. 3, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் நமக்கென்று ஒரு சந்திரன் சுழன்று கொண்டிருப்பதால் தான் நாம் பூமியில் "நடமாட" முடிகின்றது. அறிவியல் அறிஞர்களைக் கேட்டால் ஒரு பட்டியலே போட்டுத் தருவார்கள் - என்னென்ன பொருள்களால் மனிதனுக்கு என்னென்ன நன்மைகள் என்று. சொல்லப் போனால் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதற்கு ஒரு முற்றுப் புள்ளியே வைக்க முடியாது! மற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் நன்மைகளை அடைய முடிவது எதனால்? அவை அனைத்துமே இறைவனின் கட்டளைகளுக்கு அடி பணிந்து நடப்பதினால் தான். "சுதந்திரம்" வழங்கப் பட்ட மனிதனும் இறைவனுக்கு அடி பணிந்து நடந்து கொண்டால், மற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் அடைந்திடும் நன்மைகள் பன்மடங்கு பெருகி விடும். இது ஏனெனில் - படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் பாதையில். மனிதனும் இறைவனின் பாதையில் எனும்போது ஒரு ஒருங்கியைந்த இயக்கத்துக்கு அது வழி வகுக்கிறது. இறைவனின் "குடும்பத்தில்" எல்லாரும் ஓரணியில். எனவே நன்மைகள் பெருகுகின்றன. இதனை திருக் குர்ஆனின் சில வசனங்களைக் கொண்டு ஆய்வு செய்வோமா? "அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறை நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கை மேற்கொண்டு இருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம்." (குர்ஆன் 7:96) மேலும், 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றும் கூறினேன். அப்படிச் செய்வீர்களாயின் அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான். இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (குர்ஆன் 71: 10 - 12 ) இறை நம்பிக்கைக்கும் வானம் - பூமியின் அருள் வளங்கள் நம்மை வந்தடைவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. மன்னிப்பு கேட்பதற்கும் மழை பொழிவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. *** அப்படியானால் இறை வழிகாட்டுதலைக் கண்டு கொள்ளாமல் மனித சமூகம் தன்னிச்சையாக செயல்பட்டால் என்ன தான் நிகழ்ந்து விடும்? இறைவனின் படைப்புகள் எண்ணற்றவை. சின்னஞ்சிறிய அணுக்கள் முதல், பென்னம்பெரிய விண்மீன் மண்டலங்கள் வரை - எல்லாமே இறைவன் காட்டிய பாதையில் - அதாவது - இயற்கை விதிகளுக்குட்பட்டு - இம்மியளவும் பிசகாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது இறைவனின் படைப்புகளில் 99.9999% இறைவனின் பாதையில். இறைவனின் படைப்பில் 0.00001% மட்டுமே உள்ள மனிதன் இறைவனின் பாதைக்குள் வர மறுப்பு. என்ன நிகழும்? இப்போது மேலே சொல்லப்பட்ட திருகு மறை கதையை மீண்டும் படியுங்கள். (இன்ஷா அல்லாஹ் "இவன் தான் முஸ்லிம்!" கட்டுரை பாகம் 2 ல் மேலும் சிந்திப்போம்.)
|



