User Info

IP Address
38.107.191.103
United States United States

Who's Online

We have 2 guests online

Impressions total:61100
நமது வெட்க உணர்ச்சியைப் புதுப்பித்துக் கொள்வோமா? PDF Print E-mail
Saturday, 24 January 2009 21:12

ஒவ்வொரு மார்க்கத்துக்கும் ஒரு நற்பண்பு உண்டு. இஸ்லாத்தின் நற்பண்பு - வெட்க உணர்ச்சி ஆகும் என்றார்கள் நபியவர்கள். (நபி மொழி ஆதார நூல்: மாலிக் )

இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நடந்த சம்பவம் இது: ஒரு பெண் தனது மகன் போரில் இறந்து விட்டார் என்று கேள்விப் படுகிறார். அவர் அந்தச் செய்தி உண்மை தானா என்று அறிய போர்க்களம் நோக்கி ஓடுகிறார். ஆனல் அதற்கு முன் அப்பொழுது தான் அறிவிக்கப் பட்டிருக்கும் "ஹிஜாப்" முறைப்படி தனது உடல் முழுவதும் மறைக்கப் பட்டிருக்கிறதா என்று சில மணித் துளிகள் எடுத்து அவர் உறுதி செய்து கொள்கிறார்.

பின்னாளில் அந்தப் பெண்மணியிடம் அந்தத் துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் "ஹிஜாப்" விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப் பட்டது. அதற்கு அந்தப் பெண்மணி இப்படிப் பதிலளித்தார்.

"நான் என் மகனைத் தான் இழந்தேன். ஆனால் நான் என் "ஹயா"வை (வெட்க உணர்வை) இழக்கவில்லையே..."

அதாவு பின் அபி ரபாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உமக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அவர்கள் இதோ இந்த கறுப்பு நிறப் பெண்மணி தான். இவர் (ஒரு முறை) அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம வந்து " நான் வலிப்பு நோயால் பாதிக்கப் படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. ஆகவே எனக்காக அல்லாஹ்விடம் வேண்டுங்கள்" என்றார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்கு குணம் அளிக்கும் படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்" என்று கூறினார்கள். அப்பெண்மணி நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன் என்று கூறினார். (வலிப்பு வரும் போது ஆடை விலகி ) என் உடல் திறந்து விடுகிறது. அப்படி திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அண்ணலார் இப்பெண்ணுக்காக பிரார்த்தித்தார்கள் என்றார்கள். (நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி. முஸ்லிம்)

பொறுமையும் வெட்கமும் - சொர்க்கம் சேர்த்திடும் பண்புகளாகும், சரி தானே!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஃபெளஸியா என்ற முஸ்லிம் மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். அம்மாணவி முழு ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, தேர்வுக் கண்காணிப்பாளர், "நீ எப்படி பர்தாவை அணிந்து கொண்டு தேர்வு எழுத முடியும்? உன்னை நான் பர்தாவுடன் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன். நீ உடனே பர்தாவைக் கழற்றி விட வேண்டும்" என்று கூறினார்.

உடனே அந்த மாணவி,"எனக்கு முழு பாதுகாப்பு அளிக்கக் கூடிய இந்தப் பாதுகாப்புக் கவசமாகிய பர்தாவைக் கழற்றி விட்டுத் தான் முழு ஆண்டுத் தேர்வு எழுத வேண்டும் என்றால் எனக்கு இந்த முழு ஆண்டுத் தேர்வே தேவை இல்லை!"

பிறகு அம்மாணவி பர்தாவுடனே அப்பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டார். அம்மாணவியே அப்பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வில் முதல் தகுதியுடன் வெற்றி பெற்றார்.

ஒரு பத்திரிகையாளர், டமாஸ்கஸில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றுக்கு சென்றிருந்தாராம். அங்கே படித்துக் கொண்டிருந்த, ஹிஜாப் அணிந்திருந்த இளம் மாணவி ஒருவரை அவர் கேட்டாராம்: "இந்தக் கோடை வெப்பத்திலும் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்களே, கடும் சூடாக இல்லை?"

அதற்கு அப்பெண்மணி சொன்ன பதில்: "நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது என்று நபியே நீர் கூறுங்கள்." ( குர் ஆன் - 9: 81)

வெட்க உணர்ச்சி என்பது பெண்களுக்கு மட்டும் தானா? படித்துப் பாருங்கள் பின் வரும் இறை வசனங்களை!

நபியே! முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.....

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.....( குர் ஆன் 24: 30, 31)

இறைவனின் தூதர் எந்த அளவுக்கு வெட்க உணர்ச்சி உடையவர் தெரியுமா? தனது சொந்த அறையில் ஒளிந்து கொண்டிருக்கும் பருவ மங்கையை விட அதிகம் வெட்கப் படுபவர்களாக விளங்கினார்கள் - நபியவர்கள்" (நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

உத்மான் (ரலி) அவர்கள் எப்படி அழைக்கப் பட்டார்கள் தெரியுமா? "வெட்க உணர்ச்சியை முழுமைப் படுத்தியவர்." என்று.

இந்த வரலாற்றுச் சான்றை கவனியுங்கள்:

அஸ்மா (ரலி) அவர்களைத் தெரியுமா? அபூ பக்ர் (ரலி) அவர்களின் இன்னொரு மகள் தான் அவர்.

அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார்கள். உமையாக்கள் கிலாஃபத்தை அபகரித்து மன்னராட்சி முறையில் ஆட்சி செய்த சமயம் அது. அப்போது அவர்கள் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி. அவருடைய மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள், உமையாக்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போர் தொடுத்திருந்தார்கள். எதிரணியின் தலைவன் - ஹஜ்ஜாஜ் பின் யூசுப்!

போர் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்த சமயம். தாயைப் பார்த்து ஆலோசனை கேட்டிட வருகிறார் அப்துல்லாஹ்.

"எனது அணியில் இருந்த பலர் என்னைக் கை விட்டு விட்டார்கள்! எனது அணியில் இப்போது ஒரு சிலரே. நான் இப்போது என்னம்மா செய்யட்டும்? சரணடைந்து விடவா?"

"அது நீ முடிவு செய்திட வேண்டிய விஷயம் மகனே! ஆனால் நீ உண்மையின் பக்கம் இருப்பதாக எண்ணினால் தொடர்ந்து போராடி உயிர் நீக்கலாம் - உனது அணியில் பலர் உயிர் நீத்தது போல!

ஆனால் நீ இந்த உலகத்தை விரும்பினால் - என்ன ஒரு துரதிருஷ்டமான மனிதன் நீ!"

"ஆனால் நான் இன்று நிச்சயம் கொல்லப் பட்டு விடுவேன்."

"அது நீ ஒரு கொடுங்கோலனிடம் சரணடைவதை விட சிறந்தது!"

"எனக்கு மரண பயம் ஒன்றும் இல்லையம்மா! எனது உடலைக் கிழித்து சிதைத்து விடுவார்கள் என்றே நான் அஞ்சுகிறேன்."

"அறுக்கப் பட்ட ஆட்டின் தோலை உரிப்பதால் ஆட்டுக்கு வலி ஏற்படுமா என்ன?"

"என்ன அற்புதமான தாய் நீங்கள்!"

"அருகே வா மகனே! நான் உன்னை ஒரு தடவை உச்சி முகர்ந்து கொள்கிறேன். இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கலாமல்லவா?"

அப்துல்லாஹ் அவர்கள் குனிய அந்த வீரத்தாய் தன் மகனை இறுகக் கட்டி அணைத்து தலையிலும், முகத்திலும், கழுத்திலும் முத்தங்களைப் பொழிகிறார்!

அப்போது ஏதோ ஒன்று அவர்களுக்குத் தட்டுப் பட, "என்ன மகனே இது?" என்று கேட்கிறார்கள்.

"கவச உடை அம்மா!"

உயிர்த் தியாகிக்குரிய ஆடை இதுவல்லவே! இதை எடுத்து விடு. உனது அசைவுகளுக்கு - இது இல்லாமலிருப்பதே இலகுவானது. மாறாக "சிர்வல்" (நீளமான கீழாடை)ஒன்றை அணிந்து கொள்! போரில் நீ கொல்லப்பட்டாலும் உனது மறைவிடம் (
Private parts) வெளியே தெரிய வாய்ப்பிருக்காது!

அன்று மாலையே அப்துல்லாஹ் - சஹீதாகிறார். (இன்னா லில்லாஹி.. )

இந்தத் தாயைக் கவனித்தீர்களா? தனது மகன் போரில் கொல்லப் படுவது குறித்து கிஞ்சிற்றும் கவலைப் படாதவர் - அந்தத் தருணத்திலும் - தனது மகனின் மானத்தைப் பற்றிக் கவலைப் படுகிறாரே!

நமது வெட்க உணர்ச்சியைப் புதுப்பித்துக் கொள்வோமா?

 

முஹம்மது நபியவர்கள் சொன்னார்கள்: உனக்கு வெட்க உணர்ச்சி இல்லையேல் , நீ எதனை வேண்டுமானாலும் செய்து கொள்! (நபி மொழி ஆதார நூல்: புகாரி)

 

 
© 2008 - 2009 CounselorMansoor.com
Site Designed and Hosted by MohamedHusain.com